கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ்ஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த மத போதகர் ஜான் ஜெபராஜ்(37). இவர் கடந்த 2024 ம் ஆண்டு மே மாதம் அவர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது 17 வயது மற்றும் 14 வயதுடைய சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இவர் மீது புகாரளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் கூறியதையடுத்து அவர் மீது புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்தததும் மத போதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். ஜான் ஜெபராஜ்ஜை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
ஜான் ஜெபராஜ், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்து இருப்பதால் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே அவர் வெளிநாடு தப்பி சென்றுவிடுவதை தடுக்க நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜான் ஜெபராஜ் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.