சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளையும், 5 செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
என்னிடம் வழங்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியல்படி, மொத்தம் 1502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும். தேர்தலின்போது, உறுப்பினர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நீதிபதி பாரதிதாசன் கூறினார்.