திருச்சி பிரஸ் கிளப் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இதற்கான நிர்வாகிகள் ஒருமனதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் விலகும் நிர்வாகிகள் சேர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான பட்டியலை முடிவு செய்தனர். இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலுக்கு கடந்த மாதம் 17ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் கிடைக்கவில்லை. மேலும் சிலர் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதனால் திருச்சி பிரஸ் கிளப் வரலாற்றில் முதல் முறையாக நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் அக்டோபர் 6ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலராக முன்னாள் தலைவர் சையது முதாகர் நியமிக்கப்பட்டார்.
தலைவர், செயலாளர் மற்றும் 2 துணை தலைவர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. சென்னை தினமலர் நிருபர் ஜெகன்நாத், டிடி நெக்ஸ்ட் நிருபர் மைக்கேல் காலின்ஸ், பாலிமர் டிவி நிருபர கலைவேந்தன் ஆகியோர் தலைவர் பதவிக்கு களமிறங்கினர். ஜெகன் அணியில் செயலாளர் பதவிக்கு தினமலர் நிருபர் திவாகர், காலின்ஸ் அணியில் செயலாளர் பதவிக்கு இந்து தமிழ் செய்தி ஆசிரியர் ராஜ் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். அதேபோல் துணை தலைவர்கள் பதவிக்கு சகாய ஜெயராஜ்(தினமலர் போட்டோகிராபர்), முத்துமணி(தினகரன் நிருபர்), கணேசன் (நியூஸ் 7 கேமிராமேன்) ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு சற்றும் இளைத்ததல்ல, என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக தேர்தல் களைகட்டியது. போட்டியாளர்கள் வாக்குகள் கேட்டு உறுப்பினர்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கு சென்று ஆதரவு கோரினர்.
வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. 85 உறுப்பினர்களில் 80 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காலின்ஸ் 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெகனுக்கு 21 வாக்குகளும், கலைவேந்தனுக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் காலின்ஸ் அணியில் போட்டியிட்ட ராஜ்குமார் 42 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெகன் அணியில் போட்டியிட்ட திவாகர் 37 வாக்குகள் பெற்றார். துணை தலைவர் தேர்தலில் சகாயஜெயராஜ்(68), கணேசன் (38) ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். தினகரன் முத்துமணி 37 ஓட்டுகள் பெற்று, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகளுக்கு இ தமிழ் நியூஸ் சார்பில் வாழ்த்துக்ககளை தெரிவித்துக்கொள்கிறோம்..