நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்ற வேண்டும். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு குதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டார். அவரை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்து வந்தார். ஜனாதிபதியுடன் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் அழைத்து வரப்பட்டார்.
ஜனாதிபதி வந்ததும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி முர்மு இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
ஏழ்மை இல்லாத நாடாக இந்தியா திகழ வேண்டும். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமாக இல்லாமல் அது செயல்படுத்தப்படுகிறது. ஆயுஷ்மான பாரத் திட்டத்தின் மூலம் எழைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.
2047ல் நாம் அடைய இருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும். நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நகரத்தொடங்கி உள்ளோம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை , சக்தி அளிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளுடன் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இருமுறை இந்த அரசை தேர்வு செய்த மக்களை பாராட்டுகிறேன்.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. தேசத்தை கட்டமைக்க மத்திய அரசு சிறப்பாக பணியாற்றுகிறது. அரசுத்துறையில் ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசுத்துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. டிஜிட்டல் இந்தியா மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழைகள் அதிக அளவில் பயனடைந்து வருகிறார்கள்.
கொரோனா கலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. மலைவாழ்மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் 100க்கும் அதிகமான வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன. அவை இப்போது வளர்ச்சிப்பாதைக்கு சென்றுள்ளன. மேம்படுத்தப்பட்டுள்ளது . எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எல்லைப்பகுதிகளில் நிலவிய நக்சல் இயக்கங்களின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம். புதிய வீடுகள் கட்டும்போது அவை பெண்கள் பெயரிலேயே பதிவு செய்யப்படுகிறது. உலக நாடுகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் இந்தியா உள்ளது. நமழ பாரம்பரியம் ஆகாயத்தை தொடுவதற்கான தைரியதை நமக்கு வழங்குகிறது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அந்தமான தீவுகளுக்கு சூட்டப்பட்டது. சுயசார்பு திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அசாதாரணமான வேகத்தில் பணியாற்றி வருகிறது. உலக அளவில் நலப்பணிகளை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் உற்று நோக்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் மெட்ரோ கட்டமைப்புகள் அதிகரித்து உள்ளது. 8 ஆண்டுகளில் 300 பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தில் நமது செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. லட்சியத்தை அடைய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அவரது உரை 65 நிமிடம் இடம்பெற்றது.