கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று முன்தினம் அவரது உடல் வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களாக செயின்ட் பீட்டர்ஸ் பேராலயம் நள்ளிரவும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை தூய்மைப்படுத்துவதற்காக சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பசிலிக்கா மூடப்பட்டது. மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வாடிகன் வந்துள்ளனர்.
பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் போப்பிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று இரவு 7 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது. மூன்று நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு போப் பிரான்சிஸ் உடல் சிறப்பு திருப்பலியுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் வாடிகன் வருகிறார்கள். போப் விருப்பப்படி மடோனா ஜகானுக்கு அருகில் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் போப் உடல் அடக்கம் செய்யப்படும்.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று தனி விமானம் மூலம் வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் இந்தியா சார்பிலும் இந்திய மக்கள் சார்பாகவும் போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார். ஜனாதிபதியுடன் ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜிஜு, ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோஸ்வா டி சுசா ஆகியோரும் வாடிகன் புறப்பட்டு சென்றனர்.