ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாட்கள்அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) தமிழகம் வருகை தந்துள்ளார்.
டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு கோவை வந்த ஜனாதிபதியை தமிழக அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின்னர் அதிகார்கள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் ஊட்டி புறப்பட்டார். ஜனாதிபதி ஹெலிகாப்டரில் ஊட்டி செல்வதாக இருந்து. வானிலை மோசமாக இருந்ததால் கார் பயணமாக மாற்றப்பட்டது.
இதனையடுத்து கோவை விமான நிலையம், காளப்பட்டி சாலை, அன்னூர் சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் உதகை சாலை ஆகியவற்றிலும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உதகையில் உள்ளகவர்னர் மாளிகையில் பழங்குடியினப் பெண்களுடன் உரையாடல் நடத்துகிறார். 30ம் தேதி கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி வந்து விமானம் மூலம் டில்லி செல்கிறார்.