ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்றபின் முதன்முதலாக இன்று (சனி) தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதறகாக இன்று காலை 8.45 மணி அளவில் டில்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை புறப்பட்டார். 11.45 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தார். ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி நண்பகல் 12.15 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றன ர்.
சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். கோவிலில் இருந்து 12.45 மணிக்கு மேல் புறப்பட்டு, அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.
நாளை (ஞாயிறு) காலை காரில் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பகல் 12 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் திரும்பும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானத்தில்டில்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.