Skip to content
Home » 4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சென்னை, முதுமலை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு பிற்பகல் வரும் ஜானாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுமார் மாலை 3.30 மணியளவில் மசினகுடி அருகே சிங்காரா செல்லும் சாலையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து 3.45 மணியளவில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின்னர், முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு மற்றும் பழங்களை வழங்குகிறார்.

பின்னர், முதுமலையில் இருந்து மைசூருக்கு செல்லும் ஜனாதிபதி முர்மு, மாலை 6.50 மணியளவில் மைசூரில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில், சென்னை பழைய விமானநிலையத்துக்கு வருகிறார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். வரவேற்புக்கு பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். நாளை (6ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  முக்கிய பிரமுகர்களின் சந்திப்புக்கு பிறகு தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார். இதன்பின்னர், ஆளுநர் மாளிகையில் பெயர் மாற்றப்பட்ட ‘சுப்பிரமணிய பாரதியார்’ என்று ஹாலை திறந்து வைக்கிறார். பிறகு மாலை 7 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு விருந்து அளிக்கிறார்.  இந்த விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளுமாறு 3 நாட்களுக்கு முன் கவர்னரின் செயலாளர் நேரில் சென்று அழைப்பு கொடுத்து உள்ளார். இதனை ஏற்று விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதேபோல் மூத்த அமைச்சர்கள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார், தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவும் ஆளுநர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி 7ம்தேதி காலை புதுச்சேரிக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, 8ம் தேதி மாலை 5.05 மணியளவில் புதுவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமானநிலையத்துக்கு வந்து டில்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி, கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சிங்கா தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!