Skip to content
Home » பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

 பிரயாக்ராஜ் நகரில் லட்சக்கணக்கானோர் கூடுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் (என்டிஆர்எப்), மாநில போலீஸார், தீயணைப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கங்கை நதியில் நீந்தியபடி செல்லும் நீரடி ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு உடல்நல அசவுகரியங்கள் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்க கோபிகஞ்ச், உஞ்ச் உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை கண்காணிப்பாளர் அபிமன்யூ மங்லிக் தெரிவித்தார்.

 பிரயாக்ராஜ் நகரின் தனித்துவமான அழகையும், மகா கும்பமேளா நிகழ்வையும் வானில் இருந்து கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவையை உத்தர பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது. சுமார் 8 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்தபடி மகா கும்பமேளாவை ரசித்து பார்வையிட ஒருவருக்கு ரூ.1,296 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.5,000 செலவு செய்தால்கூட, 40 கோடி பேர் வரும்பட்சத்தில் உத்தர பிரதேச மாநில அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீடாக உள்ளது. பக்தர்கள் செலவு செய்வது இன்னும் அதிகரித்தால், மாநிலத்தின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் 2 மடங்கு அதிகரித்து ரூ.4 லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. இது மாநில ஜிடிபியை 1 சதவீதம் அளவுக்கு உயர்த்தும் எனதொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகா கும்பமேளா குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

கடந்த 2019-ல் பிரயாக்ராஜில் நடைபெற்ற அர்த்த கும்பமேளாவில் 24 கோடி பக்தர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் உ.பி. அரசுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. தற்போது 40 கோடி பேர் வரும் நிலையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.