Skip to content
Home » காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மகாத்மா காந்தி பிறந்த நாளான  வரும் அக்டோபர் 2 ம் தேதி  புதிய  அரசியல் கட்சியை  தொடங்குகிறார். அந்த கட்சிக்கு பெயர்  ஜன் சுராஜ் கட்சி. ( மக்கள் சுயாட்சி, அல்லது மக்கள் தன்னாட்சி கட்சி என்று பொருள்)  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர், 2014ல் பிரதமர் மோடி, 2015ல் நிதிஷ் குமார், 2021ல் முதல்வர் ஸ்டாலின், 2021ல் மம்தா பானர்ஜி, 2019ல் ஜெகன் மோகன் ரெட்டி, 2020ல் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலருக்காகவும் பணியாற்றி அவர்களை ஆட்சி பொறுப்பில் அமர வைத்தவர். பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்த பி.கே, தற்போது தனி அரசியல் கட்சியை தொடங்குகிறார்.

ஜன் சுராஜ், வரும் அக்டோபர் 2 ம் தேதி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்னதாக, பீகார் முழுவதும் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர். 8 இடங்களில் மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், இந்தக் கூட்டங்களில், கட்சியை உருவாக்கும் செயல்முறை, அதன் தலைமை, அரசியலமைப்பு மற்றும் கட்சியின் முன்னுரிமைகள் குறித்து அனைத்து நிர்வாகிகளுடனும் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  பீகார் மாநிலம் பாட்னாவில் பிரசாந்த் கிஷோர்  கூறியதாவது:

புதிய கட்சி வருகின்ற அக்டோபர் மாதம் 2 ம் தேதி தொடங்கப்படும். கட்சி தொடங்கப்படும் முதல் நாளிலேயே 1 கோடி உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக ஜன் சுராஜ் கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

ஜன் சுராஜ் அரசியல் கட்சியாக உருவானால் எந்தவொரு சாதி, சமூகத்துக்குள்ளும் அடங்கிவிடாது. பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்.சி, முஸ்லிம் என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு முறையும் இந்த ஐந்து வகுப்புகளில் ஒருவருக்கு கட்சியை வழிநடத்த வாய்ப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டிற்கும் அல்லது 2 ஆண்டிற்கும் ஒரு தலைவர் என அனைத்து தரப்புக்கும் கட்சியை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்படும்.

தலித்துகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், புதிய கட்சியின் முதல் தலைவர் இந்தப் பிரிவில் இருந்து வருவார். சுழற்சி முறை பிரதிநிதித்துவம் வழங்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் திட்டம் உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். கடந்த சில தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கான வியூகங்களை வகுத்து கொடுத்து பிரபலமான பிரசாந்த் கிஷோர், தற்போது தனிக்கட்சி தொடங்க உள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகள் பீகாரில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த கட்சிகளின் அரசியலுக்கு மாற்றாக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது போகப்போகத் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!