தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
தவெக வெற்றி விழாவில் நான் கலந்து கொள்வேன். தவெக வெற்றி பெற்றால் இங்கிருக்கும் பலர் எம்.எல்.ஏ ஆவீர்கள். தவெக வெற்றி பெற்றால் அது என்னுடைய வெற்றி அல்ல. தேர்தல் வெற்றி, தோல்விக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் தமிழகத்தின் புதிய நம்பிக்கை. தமிழக மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜய் நினைக்கிறார்.
தவெக வென்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் உழைப்பு தான் காரணம். தமிழ்நாட்டில் வகுப்பு வாதம், குடும்ப அரசியல் ஊழல் ஆகிய மூன்றையும் ஒழிக்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும். எந்த மாநிலத்திலும் இல்லாத ஊழல் இங்கு உள்ளது. அரசியல் ஊழலில் தமிழ்நாடு தான் மோசமாக உள்ளது. கபில்தேவும், கவாஸ்கரும் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருந்தால், நமக்கு டோனி, கோலி கிடைத்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மதத்தின் மீதான அச்சம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் என்னை விட பிரபலமான பீகார்காரர் டோனி தான்.
தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன். தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல். தமிழகத்தின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தமிழக மக்கள் மத அரசியலை வேரூன்ற விடமாட்டார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கெட்அவுட் ஹேஸ்டேக்கில் விஜய், ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்ட உடன், பிரசாந்த் கிஷோரிடம் அதில் கையெழுத்து போடும்படி ஆதவ் அர்ஜூனா கூறினார். ஆனால் அவர் கையெழுத்திட மறுத்து விட்டார். இதனால் விஜய், ஆதவ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.