Skip to content
Home » பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

பீகார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4  சட்டமன்ற  தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆகியவை 2 முக்கிய கட்சிகளாக உள்ளன.

வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல்கட்சியை தொடங்கி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.  இந்த இடைத்தேர்தலில், இவர் நிதிஷ், லாலு இருவரில் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற கேள்வி  எழுந்துள்ளது.
இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறும்போது, ‘இடைத்தேர்தலின் 4 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்துவோம். இதில்பெறும் வெற்றி எங்களுக்கு 2025 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க உதவும்’ என்றார்.

ராம்கர் தொகுதியின் எம்எல்ஏவாக லாலு கட்சியின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின்(ஆர்ஜேடி) சுதாகர் சிங் இருந்தார். இவர் பக்ஸர் தொகுதியின் எம்.பி.யாகி விட்டார். தராரியில் மெகா கூட்டணியின் சிபிஐஎம்எல் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த சுதாமா பிரசாத் ஆரா தொகுதியின் எம்.பி.யாகி விட்டார். பேலாகஞ்ச் தொகுதி எம்எல்ஏ சுரேந்திர பிரசாத் யாதவ், தற்போது ஜெஹனாபாத்தில் ஆர்ஜேடி கட்சியின் எம்.பி.யாகி விட்டார்.

இதனால், 3 தொகுதிகளில் லாலுதலைமையிலான மெகா கூட்டணியுடன் ஜன் சுராஜுக்கு கடும் போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது. நான்காவதான இமாம்கஞ்சில் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி கயா தொகுதி எம்.பி.யாகி விட்டார். மீண்டும் அந்த தொகுதியில் ஜிதன் ராம் கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக, ஜன் சுராஜுக்கு என்டிஏவுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் முஸ்லிம் மற்றும் யாதவ் வாக்குகள் அதிகம். எனவே, இந்த நான்கில் ஒன்றில் ஜன் சுராஜ் வென்றாலும்  பீகாரின் இருபெரும் கூட்டணிகளுக்கும் பிரசாந்த் கிஷோரின் நெருக்கடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!