பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இவர் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பீகாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் போது பெலகஞ் என்ற இடத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது.. என்னுடைய பிரசாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? ஒரு தேர்தலுக்கு ஒரு அரசியல்கட்சிக்கு நான் ஆலோசனை கூறினால் எனது கட்டணம் ரூ. 100 கோடி. இதுபோன்ற ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரசாரத்திற்கு செலவு செய்ய முடியும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.