ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்துள்ள ‘துணிவு’ படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள ‘வாரிசு’ படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபு இரண்டு படங்களையும் வாழ்த்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி ஏர்போட்டில் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என இரண்டு படங்களுமே நன்றாக போகும். இரண்டு பேரும் நம்ம தம்பிகள்தான். இருவரின் படங்களும் வெற்றி பெறட்டும். சந்தோஷம்” என்றார்.