விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளதாக பழ. நெடுமாறன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிருடன் இருந்தால், 2009ல் முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவில் உள்ள நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கொலை முயற்சிகளில் இருந்து தப்பிக்க, தன்னைப் போல தோற்றம் கொண்டவர்களை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதாக கருதப்படுகிறது.
பிரிட்டனின் முன்னாள் ராணியான எலிசபத்தை போல தோற்றம் அளிக்கும் எலா ஸ்டாக் என்ற பெண்மணி, ராணிக்கு பதிலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைன், தன்னைப் போல உருவ ஒற்றுமை கொண்ட மூன்று நபர்களை, பொது நிகழ்ச்சிகள், பேரணிகளில் பயன்படுத்தியுள்ளார். நாசி ஜெர்மனியின் ஹிட்லருக்கு பதிலாக, அவரைப் போல தோற்றம் கொண்ட கஸ்டேவ் வெல்லெர் என்பவரை பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தியுள்ளார்.
இதே போல், சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினும் தன்னை ஒத்த உருவ ஒற்றுமை கொண்ட நபரை தனக்கு பதிலாக பல இடங்களில் பங்கெடுக்க செய்துள்ளார். கொலை முயற்சிகளில் இருந்து தப்பிக்கவும், உடல் நலக் குறைவை மறைக்கவும் இத்தகைய உத்திகளை பல்வேறு தலைவர்கள் பல கட்டங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களைப் போல, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும், தனக்குள்ள ஆபத்தை தவிர்க்க தன்னை போன்று தோற்றம் கொண்டவரை பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி உரும் ஒற்றுமை கொண்டவரை கொன்றுவிட்டுத்தான் இலங்கை அரசு பிரபாகரன் என நம்புகிறதா? அல்லது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக போரில் கொல்லப் பட்ட பிரபாகரனின் தோற்றம் கொண்டவர் வீடியோவை இலங்கை அரசு திட்டமிட்டு வெளியிட்டதா? என்ற கேள்விகள் எழ தொடங்கியுள்ளன.