Skip to content
Home » விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகள் பேசிய வீடியோ…. உளவுத்துறை ஆய்வு

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகள் பேசிய வீடியோ…. உளவுத்துறை ஆய்வு

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்ஈழத்தை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல கருதி தடைகள் விதித்தன. அது மட்டுமின்றி கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த போது அந்த நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்தன.

சர்வதேச நாடுகளிடம் பெற்ற ஆயுதங்களை கொண்டு 2009-ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அவரது மனைவி, மகள், மகன்களும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. ஆனால் பிரபாகரனும், மனைவி, மகள் ஆகியோரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியானது.

அன்று முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபாகரனின் மனைவி, மகள் உயிரோடு இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு சாரார் மறுத்தனர். பிரபாகரன் மனைவி, மகள் பெயரில் சிலர் நிதி வசூல் செய்து முறைகேடு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நேற்று மாலை புதிய வீடியோ வெளியானது. அதில் துவாரகா போன்ற உருவ அமைப்புடைய ஒரு பெண் தோன்றி பேசினார்.  துவாரகா பேசியது என வெளியான வீடியோவில் அந்த பெண் பேசுகையில், “சிங்களத்துக்கு எதிரான தமிழ்ஈழ அரசியல் போராட்டம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம் முற்று பெறவில்லை” என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் சிங்களர்கள் தங்களுக்கு எதிரி அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் இந்த வீடியோவை பார்த்தனர். பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 27-ந்தேதியை எப்போதும் ஈழ தமிழர்கள் மாவீரர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த தினத்தில் இந்த வீடியோ வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து சர்வதேச உளவு அமைப்புகளும், இந்தியாவின் உளவு அமைப்புகளும் ஆய்வு மேற்கொண்டன.  சில உளவு அமைப்புகள், இந்த வீடியோ தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.  இது நம்பதகுந்ததாக இல்லை என்று கூறி உள்ளன. அதே நேரத்தில் ஒரிஜினல் வீடியோவை ஆய்வு செய்தால் இதன் தன்மை குறித்து இன்னும் ஆழமாக கூறமுடியும் என கருத்து தெரிவித்து உள்ளன.  இலங்கை அரசும் இதை மறுத்து உள்ளன.

நேற்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.  அப்போது அங்கிருந்த பழ நெடுமாறன், ஈழ கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர்  பிரபாகரன் மகள் உயிருடன் இருப்பதாக கூறினர். இதுபோல பழ கருப்பையாவும்  உறுதிப்படுத்தினார். பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்களும் இந்த வீடியோ நம்ப தகுந்ததாக இல்லை என்றே கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *