திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காசுகடைத் தெருவில் மின்தடை கண்டித்து திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணச்சநல்லூரில் உள்ள
காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி முதல் இன்றுகாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக மின் விநியோகம்
இல்லை. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேர மின்தடையால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. மணச்சநல்லூரில் உள்ள பல்வேறு பகுதியில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர்- திருச்சி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல்நிலைய அதிகாரிகள் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டனர். ஆனால் போன் எடுக்கவில்லை என்று கூறினர். மின்தடை காரணமாக குடிநீர் வரவில்லை என்று புகார் தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.