அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்றுள்ளார்.இந்த நிலையில் நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் பத்திரிக்கை வைப்பதற்காக ராமலிங்கம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து சந்தேகம் அடைந்த வெற்றிவேல் ராமலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக
தெரிவித்துள்ளார். இதையடுத்து ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவை கடப்பாரையால் நெம்பி பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், வீட்டில் இருந்த பீரோவை உடைத்த அதில் வைத்திருந்த 33 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சீராளன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கதவுகளில் கைரேகைகளை சேகரித்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.