திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தன்னை வெற்றி பெறச் செய்ததன் காரணமாக, தனக்கு சொந்தமான நிலத்தில் கிராம மக்கள் பயன்படுத்த ஏதுவாக பொதுபாதை அமைத்துக் கொடுத்திருந்தார். இந்த பொதுப் பாதையினையே அந்த கிராம மக்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்தனர்.
இதனிடையே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாகவும், ஜாதி மோதலை ஏற்படுத்தும் விதமாக பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மற்றும் போதராஜ் ஆகிய இருவரும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாதவாறு முட்களை வெட்டி போட்டு பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது என்றும் எனவே, இன்றைய தினம் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டுவந்து பொதுப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றிட நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக பள்ளிக்கு கூட செல்ல முடியாமல் குழந்தைகள் அவதிப்படுவதாகவும், இந்தப் பாதை இல்லாவிட்டால் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது எனவும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.