Skip to content

சர்வாதிகாரியாக மாறுவேன்……முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

  • by Authour

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு , கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதான் இந்தத் திட்டத்தினுடைய நோக்கங்கள். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் இத்தகைய குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. அதற்காக, முழுவதுமாக தடுத்துவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. குறைந்து கொண்டு வருகிறது என்று தான் நான் சொல்கிறேன்.

இந்தளவுக்கு குறைய, அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்ற காவல்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆர்வமும், அக்கறையும் குறையாமல் செயல்பட்டு, முற்றிலுமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியபோது, இது சமுதாய நலனுக்கான ஒரு சிறந்த திட்டம் என்று மருத்துவர்களும், பொதுமக்களும் வரவேற்றார்கள். போதைப் பழக்கத்தால், சீரழிந்து இருக்கின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணி தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. போதைப் பழக்கம் என்பது, அதை பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில்லாமல், அவர்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய் ஆகும். போதை ஒழிப்பை பொறுத்தவரை தடுப்பு நடவடிக்கைகளுக்கும் விழிப்புணர்வு பிரசாரமும் ஒரு சேர நடக்க வேண்டும். காவல்துறையும் . பொதுமக்களும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும் . போதை பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன்.  போதை பொருள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும். போதைப்பொருள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போதை இல்லாத தமிழ்நாட்டை நிச்சயம் உருவாக்கலாம் உருவாக்குவோம்.

இவ்வாறு தெரிவித்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் பொன்முடி,  மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மகேஷ், உள்துறை செயலாளர்  அமுதா,  எம்எல்ஏ தாயகம் கவி, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர். காவல்துறை கூடுதல் இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், மற்றும் காவல்துறை , அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!