திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி கடந்த 08.08.23-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாகுளம் கரை பகுதியில் இளைய சமூகத்தை சீரழிக்கும் போதை மாத்திரைகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்த காந்தி மார்க்கெட் வரகனேரியைச் சேர்ந்த ரவுடி ஹசன் அலி 26/23 த.பெ.முகமது யூசுப் என்பவரை கைது செய்து, எதிரியிடமிருந்து போதை ஊசி 1 மற்றும் Tydol போதை மாத்திரைகள் 50- ம், Opipai போதை மாத்திரைகள் 78- ம் பறிமுதல் செய்து, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹசன் அலி என்பவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகளும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகளும், பாலக்கரை காவல்நிலையத்தில் 2 குற்ற வழக்குகளும், அரசு மருத்துவமனை நிலையத்தில் 1 குற்ற வழக்கு உட்பட 12 குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே ஹசன் அலி என்பவர் இளைய சமுதாயத்தை கெடுக்கும் போதை மாத்திரைகளை தொடர்ந்து விற்பனை செய்பவர் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என்றும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி ஹசன் அலி தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்படி ஹசன் அலியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ஹசன் அலி மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.