தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 – குடியரசு தினம், மார்ச் 29- உலக தண்ணீர் தினம், மே 1 – தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15- சுதந்திர தினம், அக்டோபர் 2 – ஜெயந்தி, நம்பர் 1 – உள்ளாட்சிகள் தினம் ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் வருகிற நவம்பர் 1ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்.31 வியாழக்கிழமை அன்று தீபாபளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன்காரணமாக பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவ.1 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் தீபாவளி பண்டிகை, வார இறுதி நாட்கள் என 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதேநேரம் நவ.1 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தையும் மற்றொரு நாளில் மாற்றி வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று நவ.1 அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.