Skip to content
Home » நர்சுகளுக்கு பணி நியமன ஆணை…..முதல்வர் வழங்கினார்

நர்சுகளுக்கு பணி நியமன ஆணை…..முதல்வர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015 முதல் தற்போது வரை 15,409 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களின் பணியானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்த பின்னர், நிரந்தர காலிப் பணியிடத்தில் வரிசைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தர பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதே போல் 92 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள், என 177 இருட்டறை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உணவு பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவு பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *