கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நேற்று மறைந்தார்.
இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார். இந்நிலையில் இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போப் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கின்போது 1 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும், குறிப்பிட்ட நாளில் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்களும் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதுபோல உலகத்தலைவர்கள் அனைவரும் போப் மறைவுக்கு இலங்கல் தெரிவித்து உள்ளனர்.
போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, வாடிகனில் அவர் வாழ்ந்த இல்லம் பூட்டப்பட்டது. தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப் இறுதி சடங்கு 4 முதல் 6 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2013-ம் ஆண்டு போப் பெனடிக்ட், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய போப்பாக பிரான்சிஸ் தேர்வுசெய்யப்பட்டார். அதன்மூலம் கடந்த 1,200 ஆண்டுகளில் முதல்முறையாக ஐரோப்பாவை சேராத ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையை பெற்றார்.
போப் பிரான்சிஸ் தனது பதவிக் காலத்தில் கருணை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பணிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டு பணியாற்றினார். வாடிகனில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். நிதி விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதகுருக்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தார். பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.
வழக்கமாக போப் மறைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, வாடிகனின் நிர்வாக பொறுப்பை கார்டினல்கள் குழு ஏற்கும். அதன்படி, தற்போது அக்குழுவினர் வாடிகன் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளனர். போப்பின் இறுதிச் சடங்கு மற்றும் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை இவர்கள் மேற்கொள்வார்கள். போப் மறைந்தது முதல் புதிய போப்பை தேர்ந்தெடுப்பது வரை இடைக்கால நிர்வாகத்தில் வாடிகன் இருக்கும்.
போப் ஆண்டவர் மறைவையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆலயத்தில் போப் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் அங்கு நடந்த திருப்பலியில் பங்கேற்றனர். அப்போது போப்பின் வயதை குறிக்கும் வகைில் 88 முறை ஆலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.