அரியலூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புதிய மரத்தேரை நிறுத்துவது மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
அரியலூர் நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும், தசாவதார சிற்பங்கள் அமைந்த தமிழகத்தின் கோவிலாகவும் விளங்கி வருகிறது. இக்கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், தேர் சிதலமடைந்ததால், இந்த தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 82 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 18.6 லட்சமும் பக்தர்களின் நிதி உதவியுடன் திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. இந்த தேரை நிறுத்தவும், அதற்கான பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை இன்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பூஜையில் கலந்து கொண்டு பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், 82 வருடங்களுக்குப் பிறகு தற்போதைய தமிழக அரசின் முயற்சியால், 18.6 லட்சம் மதிப்பில் திருத்தேர் பணிகளும், 24.2 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முதல்வர்
உத்தரவுப்படி, அரியலூர் நகரில் திருத்தேரோட்டம் நடைபெறும் என்று கூறினார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முதல் கட்டமாக இரண்டு அமர்வுகள் பேசப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் நிதி துறையுடன் கலந்து ஆலோசித்த பின்னர், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் தாய்மொழியாக தமிழையும், உலகளாவிய இணைப்பு மொழியாக ஆங்கில மொழியையும் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இதுவே போதுமானது. தொடர்பு இல்லாத மற்றொரு மொழியை கற்றுத் தர வேண்டிய அவசியம் எழவில்லை. இதனை அறிவித்த மத்திய அமைச்சர், அவரது சொந்த மாநிலத்திலேயே தனது தாய் மொழியை இழந்து வருகிறார். இதுவே உதாரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமானது என்று கூறினார்.
விகடன் பிரசாரத்தை மின் முகவரியை மத்திய அரசால் துண்டிக்கப்பட்டது குறித்து பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், தமிழக முதல்வர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விகடன் பிரசித்திரத்திற்கும், திமுகவிற்கும் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் ஒரு கார்ட்டூன் வரைந்ததற்காக முகவரியை தடை செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்று கூறியதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதிக் கொள்கையில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. தமிழக முதல்வர் இதனை தவிர்த்து வருகிறார். இந்த சூழலையும் அவர் எதிர்கொள்வார் என்று கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.