தமிழ் சினிமாவின் வியக்க வைக்கும் காவிய நாவல்களில் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’. அந்த நாவல் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2வது பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் உலக நாயகன் கமலஹாசன், டிரெய்லரை வெளியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.