சென்னை பால்பாக்கத்தில் வசிக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சிலை கடத்தல் பிரிவில் டி.எஸ்.பியாக இருந்த காதர் பாஷா என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பணியின் போது தமக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டு பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவிலேயே அவரது வீட்டில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது, அவரிடம் எந்த மாதிரியான விசாரணை நடத்தப்பட்டது என்கிற விவரங்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது