திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளின் வழியாக மேலக்கல் கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை மாஜி ராணுவ காலனி உள்ளிட்ட பகுதி மக்கள் ரெயில்வே குடியிருப்புகளின் வழியாக மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தற்போது குடியிருப்பு பகுதிகள் காலியாக இருப்பதால் அந்த பகுதியில் ரயில்வே பணிமனை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக அந்தப் பகுதியில் ரயில்வே பணிமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக நூறாண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதைகள் அடைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைவார்கள் எனவும் பாதைகளை ரயில்வே நிர்வாகம் அடைக்க கூடாது எனவும்
கோரிக்கை விடுத்ததோடு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பகுதி மக்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த கோரிக்கை மனு அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால்
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 50,000 பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை அடைத்து திண்டாட வைத்த ரயில்வே நிர்வாகத்தின் அதிகார வன்முறையை கண்டித்தும்
மேல கல்கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, மாஜி ராணுவ காலனி, அம்பிகாபுரம், நாகம்மை வீதி, மகாலட்சுமி நகர், மாருதி நகர், மூகாம்பிகை நகர், ஆலத்தூர் பகுதி மக்கள் குடியிருப்புக்கு சென்று வர சாலை அமைத்து தர கோரியும் பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், வியாபாரிகள் அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.