நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்….
பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, அதில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டிய பிறகு கொண்டாடும் விழாவில், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அன்றோ! ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது.
சட்டப் பேரவையின் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது. அந்தச் சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்று, அவர்களின் உள்ளமெலாம் இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. ஜனவரி 9-ஆம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் முறைப்படித் தொடங்கி வைத்தேன். அப்போதே மக்களின் மனத்திலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதை நேரில் கண்டு களிப்புற்றேன். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், எல்லாருடைய முகத்திலும் புன்னகையைக் காண முடிந்தது.
பொங்கல் திருநாளை நமது பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் “இதுதான் தமிழர் திருநாள்” என மக்களின் மனதில் பதிந்திடும் வகையில் சிறப்பான கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர்.
சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம்.
ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்!
தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் – தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!