Skip to content
Home » பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

  • by Authour

மதுரை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 201ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

20 வகையான விவசாயப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும், வேட்டி சேலையும் கடந்த சில ஆண்டுகள் வரை வழங்கப்பட்டது. இதில் வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாயப் பொருட்கள் அருகிலுள்ள மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை அடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்த அறிவிப்பு வெளியாகாததால் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடந்துள்ளனர்.

மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்போடு வழங்கப்படும் கரும்பு ஒன்றின் கொள்முதல் விலை 33 ரூபாயாக உள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெறும் 9-11ரூபாய்வரை மட்டுமே கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

மேலும் கரும்பு விவசாயிகளுக்கு ECS முறையில் பணம் கொடுக்கப்படுவதில்லை. இது இடைத்தரகர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனவே வங்கி கணக்கு பணப்பரிமாற்ற முறை மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட வேண்டும்,

மேலும் பொங்கல் பரிசுத்தொகையான 1000ரூபாயை அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும், மேலும் வெள்ளைச் சர்க்கரை, வெல்லம், தேங்காய், வெற்றிலை, முந்திரி,மற்றும் ஏலக்காய் வழங்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவதற்காக 1000ரூபாய், பொங்கல் தொகுப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டது.

மனுதாரர் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வெள்ளை சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் வெல்லம் முன்கூட்டியே கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்கப்பட்ட போது, வெல்லம் உருகியதாகவும், கெட்டுவிட்டதாகவும் புகார்கள் வந்தது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு பல்வேறு திட்டங்களில் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதை போல பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தலாமே மேலும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கும் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாமே?. இதனால் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் ஏற்படப்போகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

மனுதாரரின் மற்றொரு கோரிக்கையான சீனிக்கு பதிலாக வெல்லம் வழங்க பரிசீலனை செய்யலாம். குறைந்த பட்சம் அடுத்து வரும் பொங்கல் பண்டிகையின்போது இதனை செய்யலாம் என தெரிவித்து, பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் வரவுவைப்பது குறித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *