தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
பல்வேறு காரணங்களால் நேரில் வந்து டோக்கன் வாங்க முடியாதவர்கள் ஒவ்வொரு அங்காடியிலும் பலருக்கு பொங்கல் பணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட தொடக்க
கூட்டுறவு சங்க செயலாளரிடம் கேட்டபோது பொங்கல் பரிசு தொகை 10ந்தேதி காலை தொடங்கி 13 ந்தேதி மாலை வரை கொடுத்தோம். மாலை 6க்கு பிறகு பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் வேலை செய்யவில்லை.
அதனால் பொங்கல் பரிசு தொகை கொடுப்பதை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது விடுபட்ட பயனாளிகள் பணத்தை அரசு திரும்பப் செலுத்தும்படி உத்தரவு வந்துள்ளதாகவும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அனைத்து அங்காடியிலும் இதே நிலைதான் என தெரிவித்தார். எனவே தமிழக அரசு பொங்கல் பரிசு தொகை விடுபட்ட தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.