பொங்கல் திருநாளையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சியில் வழக்கம் போல மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார்புரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்களை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: மதுரை, புதுக்கோட்டை, போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது 17ம் தேதி வரை செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் , அவர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட தங்கள் ஊர்களுக்கு செல்லவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கூடுதல் பணி நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படலாம். அதே நேரத்தில் அவர்கள் ஓய்வும் எடுத்து பாதுகாப்புடன் பஸ்களை இயக்க வேண்டும். பயணிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
பொங்கல் சிறப்பு பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. அந்த குறிப்பிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன போக்குவரத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், காலை, மாலை வேளைகளில் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மைதான். அதற்காக அருகில் உள்ள நடைபாலத்தை திறப்பது குறித்து கேட்கிறீர்கள். இது குறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.