Skip to content
Home » பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பும் பொங்கல் பரிசுடன் வழங்க ஏதுவாக குடும்ப அட்டைதாரர்கருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பொங்கல் பரிசு வழங்குவதற்காக 2,48,876 முழுக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின்தரம், உயரம் ஆகியவை

வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் இன்றயை தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க தேர்வு செய்யப்பட்ட கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கரும்பின் உயரம், தடிமன் ஆகியவை சரியாக உள்ளதா என பார்வையிட்டார். மேலும், விவசாயிகளிடமிருந்து சரியான அளவு உள்ள கரும்பினை மட்டும் கொள்முதல் செய்திடவும், கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக கரும்பிற்கான தொகையினை செலுத்திடவும் அலுவலர்களுக்கு மாவட்ட  கலெக்டர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கீதா, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சாய்நந்தினி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.