வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் நேற்று தமிழக அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. அதில் கரும்பு, அரிசி, சர்க்கரை ஆகியவற்றை அறிவித்துள்ள நிலையில் ரொக்கம் பற்றிய அறிவிப்பு இல்லை.
இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அமைச்சர் உதயநிதியை சந்தித்த பத்திரிகையாளர்கள் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படுமா என கேட்டனர். அதற்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி கூறியதாவது:
பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார். சேலம் திமுக இளைஞரணி மாநாடு எப்போது நடைபெறும் என்பது குறித்து இன்னும் 2 நாளில் முதல்வர் அறிவிப்பார். ஜனவரி இறுதிக்குள் மாநாடு நடைபெறும். கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நிறைவு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க நாளை டில்லி செல்கிறேன். அப்போது தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி விரைவாக தாருங்கள் என கோரிக்கை வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.