தமிழர்களில் பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் பொங்கலிட்டு புத்தாடை அணிந்து இயற்கைக்கு நன்றி தெரிவித்து படையலிடுவார்கள். தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் மறக்காமல் பொங்கல் விழாவை கொண்டாடுவார்கள். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டில்லியில் வரும் 14ம் தேதி மாலை தனது டில்லி இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடுகிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அத்துடன் முக்கியமான மத்திய அமைச்சர்கள், தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைத்துறையினர், பாஜக ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியினர் என பலருக்கும் , அமைச்சர் முருகன் அழைப்பிதழ் அனுப்பி உள்ளார். எனவே தமிழகத்தில் இருந்தும் பலர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.