தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 14 – ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் அரசு பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட்டுகள் காலியாகி விட்டதால் ஆம்னி பேருந்துகள் பயணிக்க நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி ஆமினி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
கோவையில் இருந்து நெல்லை செல்ல சாதாரண நாட்களில் 500 முதல் 700 வரை வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் பொங்கல் பண்டிகை காரணமாக ரூபாய் 1,500 முதல் ரூபாய் 2,300 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே போல் தென்காசி செல்ல ஒரு நபருக்கு ரூபாய் 1,000 முதல் 1,900 வரையும், நாகர்கோவிலுக்கு செல்ல ஒரு நபருக்கு 1,700 முதல் ரூபாய் 2,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் இந்த கட்டண உயர்வால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பொங்கல் பண்டிகை பயன்படுத்தி கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.