பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
\ “வரும், 2025 பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, 1 கோடியே, 77 லட்சத்து, 64,476 சேலைகள், 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தரம் பரிசோதித்து, தேவை பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக, 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, கூடுதலாக தேவைப்படும் தொகை மீண்டும் வழங்கப்படும். வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.பண்டிகையின் போது அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேஷ்டி, சேலைகளை நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.