பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சென்னையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று (ஜன.3) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேற்கண்ட 3 நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.