தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பு பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. வரும் 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் பெறாதவர்கள் 13ம் தேதி அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாதா என்ற கேள்வி எழுந்தது.
அந்த கேள்விக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 15ம் நாள் பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து 16ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.