தஞ்சாவூர் தெற்கு வீதியில் பாண்டித்துரை என்பவர் நடத்திவரும் தங்க நகை அடகு நிறுவனத்தில் தஞ்சை பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் நகைகளை அடமானம் வைத்து ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 500 தொகையை பெற்றுச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து மேற்படி நிறுவனத்தில் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தபோது தான் அடமானம் வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரியவந்தது. தொடர்ந்து நகைகளை அடமானம் வைத்த நபர்கள் முகவரிக்கு சென்று விசாரித்த போது அவர்கள் வெளிநாடு சென்று விட்டதாக தெரியவந்தது. மேலும் அவர்களின் வீடும் வீடும் பூட்டி கிடந்தது.
ஏற்கனவே போலி நகைகள் அடமானம் வைத்து ஏமாற்றும் கும்பல்கள் தமிழகத்தில் அதிகம் நடமாடி வருகின்றன. இதனால் எங்கள் சங்கத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி நகைகளை அடமானம் பெற்று பாதிக்கப்படும் நபர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ஏற்கனவே தெரிவித்துள்ளார். தற்போது தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி சங்கம் சார்பில் துணைத் தலைவர் லூக்காஸ், மாவட்ட சட்ட ஆலோசனை குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சங்க உறுப்பினர்கள் தஞ்சாவூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.