ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். காலை 6.30 மணிக்கே வாக்குச்சாவடிகளில் மக்கள் காத்திருந்து வாக்களித்ததை பார்க்க முடிந்தது.
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கச்சேரி சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 8.50 மணிக்கு வாக்குப்பதிவு செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா பெரியண்ணவீதி வாக்குச்சாவடியிலும், தேமுதிமுக வேட்பாளர் ஆனந்த் அக்ரகாரம் வாக்குச்சாவடியிலும், கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி சம்பத் நகர் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ம் தேதி நடக்கிறது.