மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சத்தீஷ்கரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்கரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ளது.சத்தீஷ்காரில் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி மற்றும் மாநில கட்சிகள் களத்தில் இருந்தபோதிலும், காங்கிரஸ்-பா.ஜனதா இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.
சிதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதலே ஆர்வத்துடன் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
சத்தீஷ்கர் மாநில பாஜக தலைவரும் லோர்மி தொகுதி வேட்பாளருமான அருண் சாவோ, பிலாஸ்பூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வாக்குப்பதிவு செய்தார்.
சத்தீஷ்கரில் முதல் கட்டத்தேர்தல் கடந்த 7ம் தேதி 20 தொகுதிகளில் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் இன்று 22 மாவட்டங்களில் பரவியுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அதேநேரம் நக்சலைட்டு தாக்கம் நிறைந்த ராஜிம் மாவட்டத்தின் பிந்த்ரனாவாகர் தொகுதியின் 9 வாக்குச்சாவடிகளில் மட்டும் காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 130 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்கள் 1.63 கோடி ஆகும். இதில் 81.41 லட்சம் ஆண்கள் மற்றும் 81.72 லட்சம் பெண்களும் அடங்குவர். இவர்கள் வாக்களிப்பதற்காக 18,833 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டு உள்ளன.
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.