288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அனைத்துவாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
மும்பை ராஜ்பவனில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோர் குடும்பத்தோடு சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
மராட்டிய துணை முதல்-மந்திரியும், பாராமதி சட்டசபை தொகுதியின் பாஜக கூட்டணி வேட்பாளருமான அஜித் பவார், மனைவி சுனேத்ராவுடன் பாராமதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மராட்டியத்தில் 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1 லட்சத்து 64 ஆயிரத்து 996 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதேபோல் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத்தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதன்படி 43 தொகுதிகளுக்கானமுதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதுதவிர உத்தரபிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது மராட்டியம் மற்றும் ஜார்கண்டில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது தெரிந்து விடும்.