கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து கடந்த ஜூலை 11ம் தேதி விதிகளை மீறி
கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டடங்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்தும், இதனால் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று பொள்ளாச்சி நகரப் பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். அனைத்து வணிகர் சங்கத்தினரும் இதில் பங்கேற்றுள்ளனர். மேலும் சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷமும் எழுப்பினர். இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று ஒரு நாள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடக்கிறது.