பி ஏ பி பிரதான மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த சி. மலையாண்டிபட்டணம் பகுதியில் முத்துசாமி என்பவர் தென்னை விவசாயம் செய்து வருகிறார் மேலும் கால்நடைகளும் வளர்த்து வருகிறார். அவரது தோட்டத்தில் உள்ள கிணறு பி.ஏ.பி கால்வாய்க்கு 50 மீட்டருக்குள் இருப்பதால் இன்று மின்சார வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய கிணற்றின் மின் இணைப்பை துண்டித்தனர். இந்த நிலையில் முத்துசாமி சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்ற நிலையில் மகன் மனோஜ் மட்டும் தோட்டத்தில் இருந்தபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைக் கண்ட மனோஜ் ஆத்திரமடைந்து மின்சாரத்தை துண்டித்தால் எனது குடும்பம் என்னுடைய விவசாயம் மற்றும் கால்நடைகளும் முழுமையாக பாதிக்கப்படும் என்று பலமுறை எடுத்துக் கூறியும் அதிகாரிகள்
மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். இதனால் மனமுடைந்த மனோஜ் குமார் மின்கம்பத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மின் இணைப்பு கொடுக்கும் வரை நான் கீழே இறங்க மாட்டேன் என பல்வேறு வசனங்களை பேசி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த கோமங்கலம் காவல்துறையினர் மின் இணைப்பு கொடுப்பதாக கூறியதால் கீழே இறங்கிய மனோஜை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.