நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களைப் பெறலாம். இந்தப் பத்திரங்களை கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கலாம். கட்சிகள் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். இந்தப் பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு முன்பு நாளை ( செவ்வாய்) விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பில், எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் “கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தாமல் அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொதுவான உரிமை இருக்க முடியாது. கட்சி பெறும் நிதி விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள உரிமை இல்லை. குறிப்பிடத்தகுந்த காரணங்கள் இன்றி, அனைத்து விவரங்களையும் கேட்கும் உரிமை கிடையாது. எல்லாத் தரவுகளையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் அடங்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது