நெல்லை காங் தலைவர் ஜெயக்குமார் போல் தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் நடந்த அரசியல் படுகொலைகள் ஒரு பிளாஸ்பேக்..
எம்.கே.பாலன் : சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் எம்.கே. பாலன். பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். திமுகவில் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபயிற்சிக்கு சென்ற எம்.கே. பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்படிக் கடத்தப்பட்ட எம்.கே. பாலன் என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் பணத்துக்காக எம்கே பாலன் கடத்தப்பட்டு எரித்து கொல்லப்பட்டதாக 16 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தா.கிருட்டிணன் : தென் மாவ்ட்ட திமுக முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன். 2003-ம் ஆண்டு மதுரையில் அதிகாலையில் வாக்கிங் சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் மு.க. அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். தா.கிருட்டிணன் படுகொலை சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் தமிழ் சினிமாக்களில் ‘வாக்கிங்’ படுகொலை காட்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆலடி அருணா: தென் மாவட்ட திமுகவின் மூத்த தலைவர்களில் மற்றும் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா. 2004-ம் ஆண்டு ஆலடி அருணா, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜாஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பென்னி என்கிற பெனடிக்ட் என்கிற அருண், ஆட்டோ பாஸ்கர், பாலமுருகன், அழகர் என்கிற வளர்ந்த அழகர், ராஜ் என்கிற ஆறுமுகம், கண்ணன் என்கிற காரகண்ணன், பரமசிவன், அர்ஜுனன், தனசிங், ரவி என்கிற டாக் ரவி கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி ராமஜெயம்: திருச்சி திமுக தலைவர்களில் மூத்தவர் அமைச்சர் நேரு. இவரது சகோதரர் ராமஜெயம்தான், நேருவின் வலதுகரமாக செயல்பட்டவர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் 2012-ம் ஆண்டு திருச்சியில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்ற ராமஜெயம் திடீரென மாயமானார். பின்னர் கல்லணை சாலை காவிரி கரையோரத்தில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயத்தின் சடலம் மீட்கப்பட்டது. இப்படுகொலை நிகழ்ந்து 12 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் எதற்காக ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்? யார் படுகொலை செய்தது? என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் துப்பு எதுவுமே கிடைக்காமல் பெரும் மர்மாகவே திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு முடங்கிக் கிடக்கிறது.
நெல்லை ஜெயக்குமார்: இந்த வரிசையில் தற்போது நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த மாதம் கடிதம் எழுதி வைத்திருந்தார் ஜெயக்குமார். அதில், நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் பணம் வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றுவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ரூபி மனோகரன் தரப்பு மறுக்கிறது. இதேபோல நெல்லை ஜெயக்குமார் தமது கடிதத்தில் பலரது பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். நெல்லை ஜெயக்குமாருக்கு என்னதான் நடந்தது என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்கிறது போலீஸ் தரப்பு.