ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது:
ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள் வீடுகளுக்கு நள்ளிரவு சென்று காவல் துறை மிரட்டி உள்ளது. மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என கூறி உள்ளனர். ஊட்டி வரை வந்த ஒருவரை திருப்பி அனுப்பி உள்ளனர். உளவுத்துறை போலீசார் மூலம் இந்த மிரட்டல் விடப்பட்டு உள்ளது. அதனால் தான் பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக உள்ளது. அரசுப்பள்ளி கல்வித்தரம் குறைவாக உள்ளது. நேரில் நிறைய பல்கலைகழகங்களை ஆய்வு செய்த பிறகே இந்த கூட்டத்தை கூட்டி உள்ளேன். கல்வி வளர்ச்சிக்காக நடத்தப்படும் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் குறைவாக பங்கேற்று உள்ளனர்.இதுபோன்ற அசாதாரண சூழல் இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடப்பது பிடிக்கவில்லை. தற்போது கூட ஒரு துணைவேந்தரை போலீஸ் நிலையத்தில் வைத்து மிரட்டி வருகிறார்கள்.
அரசு மிரட்டியதாக சிலர் எழுத்து மூலம் புகார் அளித்து உள்ளனர்.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.