Skip to content
Home » 3 கைதிகள் தப்பி ஓட்டம்..2 போலீஸ் சஸ்பெண்ட், எஸ்ஐ உள்பட 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்..

3 கைதிகள் தப்பி ஓட்டம்..2 போலீஸ் சஸ்பெண்ட், எஸ்ஐ உள்பட 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த முத்தரசன் மகன் குருமாறன் (23). கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 4ம் தேதி குருமாறன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் குருமாறனை, திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் ராஜேஷ் (35), திருவாரூர் ஆயுதப்படை காவலர் ஆனந்த் (26) ஆகியோர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் போலீஸ்காரர் ராஜேசை தாக்கி விட்டு குருமாறன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக ராஜேஷ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபி சிங்கிரிபாளையத்தில் உள்ள கரிய காளியம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வழக்கில் கைதான திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த சேது (25), அவரது‌ தம்பி அய்யப்பன் என்ற அஜித் (24), பரணி (19) ஆகியோருக்கு வேறொரு திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவலில் எடுக்க விசாரிக்க 3 பேரையும் போலீசார் கோபி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கைதிகள் 3 பேரையும் மதியம் நீதிமன்ற வளாகத்தில் சாப்பிட அனுமதித்தனர். உணவு சாப்பிட்ட பின் கை கழுவ சென்ற அய்யப்பன், சேது ஆகியோர் தப்பினர். இந்நிலையில் கைதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ ஜான் கென்னடி, தலைமை காவலர் கீதாமணி, முதல் நிலை காவலர் பழனிச்சாமி, அருண்ராஜ் ஆகிய 4 போலீசாரையும் ஈரோடு எஸ்பி ஜவகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!