பெங்களூரு புறநகர் உள்ள பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 19-ந் தேதி நடந்த மதுவிருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி. நிறுவன ஆண், பெண் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த போதை விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததும், இதில் தெலுங்கு திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக தெலுங்கு நடிகை ஹேமா போதை விருந்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஹேமா வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் தான் பெங்களூருவில் இல்லை எனவும், தற்போது ஐதராபாத்தில் இருப்பதாகவும், தன்னைப்பற்றி வெளிவரும் செய்திகள் வெறும் வதந்தி எனவும் கூறியிருந்தார்.
அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகை ஆஷா ராயும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் சம்பவத்தன்று பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அங்கு போதைவிருந்து நடைபெற்றது குறித்து எனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.
ஆனால் இந்த மது விருந்தில் நடிகை ஹேமா பங்கேற்று இருந்ததை பெங்களூரு போலீஸ் கமிஷனர் உறுதி செய்தார். மேலும் சில தெலுங்கு நடிகைகள் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். இதற்கிடைேய பிடிபட்ட 103 பேரின் (கைதான 5 பேரையும் சேர்த்து) ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன். அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் போதை விருந்தில் பங்கேற்றவர்களில் 86 பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது.
குறிப்பாக தெலுங்கு நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் ஆகிய 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.ஒட்டுமொத்தமாக 59 ஆண்களுக்கும், 27 பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் (நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உள்பட) குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். விசாரணைக்கு பின் அவர்கள் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது